
லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள் – அமைச்சரவைக்கு உத்தரவிட்ட நெதன்யாகு
லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை “வெளிப்படையாக மீறுகின்றன” என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியமாக ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குதல் மற்றும் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமைதியான உறவை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
லெபனானின் பெய்ரூட் நகரின் சில பகுதிகளுக்கு வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ள நிலையில், தேவையான இடங்களில் ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று நெதன்யாகு முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 303 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பை நிறுத்திக் கொண்டால், உலகின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், எதற்கெல்லாம் உடன்பாடு எட்டப்பட்டது என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

