மறைந்த படகி ஆஷா போஸ்லேவிற்கு பிரதமர் மோடி உற்பட பிரமுகர்களின் அனுதாபம்

மறைந்த படகி ஆஷா போஸ்லேவிற்கு பிரதமர் மோடி உற்பட பிரமுகர்களின் அனுதாபம்

பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்குப் புகழஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அவருடனான தனது உரையாடல்களை என்றும் போற்றுவதாகவும், அவரது காலத்தால் அழியாத பாடல்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் கூறினார்.

இதேவேளை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,
ஆஷா போஸ்லேவின் மறைவு இசை உலகில் ஒரு “பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் பல்வேறு இசை வகைகள் மற்றும் மொழிகளுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளும் ஆஷா போஸ்லேவின் அசாத்தியத் திறமையைப் பாராட்டிய குடியரசுத் தலைவர், இசைத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் போற்றினார்.அத்துடன் பாடகியுடன் தான் மேற்கொண்ட தனிப்பட்ட உரையாடல்களைக் குடியரசுத் தலைவர் நினைவு கூர்ந்தார்.

சச்சின் டெண்டுல்கர் உற்பட பல உலக தலைவர்களும் பிரபலங்களும் மறைந்த பாடகிக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய இசையுலகின் ஈடுஇணையற்ற குரலாகத் திகழ்ந்த புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே (92) காலமானார்.

இதய மற்றும் சுவாசக் கோளாறுகள் காரணமாக சனிக்கிழமை மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் காலமானார்.

அவரது மகன் ஆனந்த் போஸ்லே இந்தத் துயரச் செய்தியை உறுதிப்படுத்தினார். நாளை (திங்கட்கிழமை) அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1933-இல் மங்கேஷ்கர் குடும்பத்தில் பிறந்த ஆஷா, தனது 9-வது வயதிலேயே பாடத் தொடங்கினார். இவரது சகோதரி மறைந்த லதா மங்கேஷ்கருக்கு இணையாக இந்தியத் திரை இசையில் பெரும் ஆளுமையாகத் திகழ்ந்தார்.

ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட வகை பாடல்களுக்கு மட்டுமே (Cabaret) என அவர் வகைப்படுத்தப்பட்டாலும், ‘உம்ராவ் ஜான்’ (Umrao Jaan) போன்ற திரைப்படங்களில் கசல்கள் மூலம் தனது அபாரத் திறமையை நிரூபித்தார்.

7 முறை பிலிம்பேர் விருதுகளையும், ‘தில் சீஸ் க்யா ஹை’ (Umrao Jaan) மற்றும் ‘மேரா குச் சாமான்’ (Ijaazat) ஆகிய பாடல்களுக்காக 2 முறை தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.

தனது 16-வது வயதில் குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக கணபத்ராவ் போஸ்லேவை மணந்தார். பின்னர் 1960-இல் அவரிடமிருந்து பிரிந்த நிலையில், 1980-இல் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனை மணந்தார்.

தனது இறுதிக்காலங்களில் பேத்தி ஸனாய் போஸ்லேவுடன் அதிக நேரத்தைச் செலவிட்டார்.

2023-ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் அவர் கூறுகையில், “உண்மையைச் சொல்லப்போனால் நான் இன்றைய காலப் பாடல்களைக் கேட்பதில்லை. பீம்சென் ஜோஷியின் செவ்வியல் இசை மற்றும் கசல்களைக் கேட்பதன் மூலமே நான் இன்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்,” என்று இசை மீதான தனது தாகத்தைப் பகிர்ந்து கொண்டார்.

ஆஷா போஸ்லேவின் மறைவு இந்திய இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். அவரது காந்தக் குரல் பாடல்கள் வழியாக என்றும் நிலைத்திருக்கும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )