ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் அங்கு ஈரானுக்கு வரி செலுத்தும் கப்பல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – ட்ரம்ப் அறிவிப்பு

ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் அங்கு ஈரானுக்கு வரி செலுத்தும் கப்பல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடனான நீண்ட நேரப் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தம் ஏதுமின்றி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று அறிவித்துள்ளார்.

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இஸ்லாமாபாத்தில் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வந்த பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

சர்வதேச கடல் பரப்பில் ஈரானுக்கு வரி செலுத்தும் ஒவ்வொரு கப்பல் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஈரானை ஒரே நாளில் அழித்துவிடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ள டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க இராணுவம் எதற்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

என்னால் ஈரானை ஒரே நாளில்… ஏன், ஒரே மணிநேரத்தில் கூட அழித்துவிட முடியும். அவர்களின் ஒட்டுமொத்த எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்களையும் என்னால் தகர்க்க முடியும். ஆனால் அதைச் செய்ய நான் விரும்பவில்லை, ஏனெனில் அந்த மின் நிலையங்களை மீண்டும் கட்டிமுடிக்க பத்து ஆண்டுகள் ஆகும், என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அறிக்கையொன்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா ஏற்கனவே அங்குள்ள ஒரு பாலத்தை தகர்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அணுசக்தி தொடர்பான விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாததால், உலக நாடுகளின் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் முற்றுகையிட அமெரிக்க கடற்படைக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து விஷயங்களும் பேசப்பட்டன, பலவற்றில் உடன்பாடு காணப்பட்டது. ஆனால் உண்மையான முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, உலகின் மிகச்சிறந்த அமெரிக்க கடற்படை, ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடும் பணியை உடனடியாகத் தொடங்கும், என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வாஷிங்டனின் இறுதியான மற்றும் சிறந்த சலுகையை (final and best offer) ஈரானிடம் சமர்ப்பித்துவிட்டு பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார்.

தற்போது உடனடியாகப் போர் மூளவில்லை என்றாலும், உலகத் தலைவர்கள் இரு தரப்பையும் அமைதி காக்குமாறும், தற்காலிக போர்நிறுத்தத்தைக் கடைபிடிக்குமாறும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையை ட்ரம்ப் உலகளாவிய மிரட்டல் (WORLD EXTORTION) என்று வர்ணித்துள்ளார்.

துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் நேற்று இரவு வரை ஈரானிய அதிகாரிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கெட்ட செய்தி என்னவென்றால், எங்களால் ஒரு ஒப்பந்தத்திற்கு வர முடியவில்லை. இது அமெரிக்காவை விட ஈரானுக்குத்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.

ஏற்கனவே ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்தப் போர் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )