
துருக்கியின் மற்றுமொரு பாடசாலையில் துப்பாக்கிச் சூடு -8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி2 பாடசாலைகளில் அடுத்தடுத்து அதிர்ச்சி
துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது எட்டு மாணவர்களும் ஒரு ஆசிரியரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்சி (Mustafa Cifci) தெரிவித்துள்ளார்.
கஹ்ராமன்மாராஸ் (Kahramanmaras) பகுதியில் உள்ள அய்சர் காலிக் (Ayser Calik) இடைநிலைப் பாடசாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் 13 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் அறுவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதலை நடத்திய 14 வயதுடைய மாணவனும் தாக்குதலுக்குப் பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்திய மாணவன் இரண்டு வகுப்பறைகளுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவனிடம் 5 துப்பாக்கிகளும் 7 மகசின்களும் (Magazines) இருந்துள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், அந்த மாணவனின் தந்தையான ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்குச் சொந்தமானவை என உள்ளூர் ஆளுநர் முக்கர்ரன் உன்லுயர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய மாணவனின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது அச்சமடைந்த மாணவர்கள் பாடசாலையின் ஜன்னல்கள் வழியாக குதித்து தப்பிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்னால் திரண்டு கண்ணீர் மல்கக் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள துருக்கிய ஜனாதிபதி ரையெப் தையிப் எர்டோகன், பாதிக்கப்பட்ட குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் ஆசிரியர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று முன்தினம் துருக்கியின் தென் பகுதி சிவெரெக் (Siverek) பிரதேச பாடசாலையில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையின் முன்னாள் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் அந்த சூட்டில் 16 பேர் காயமடைந்த நிலையில், அடுத்த நாளே மற்றுமொரு துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

