
மட்டக்களப்பில் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து – தலைக்கவசம் அணியாது பயணித்த இரு மாணவர்களும் படுகாயம்
மட்டக்களப்பு – கல்முனை பழைய வீதியின் நாவற்குடா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
நாவற்குடா உட்புற வீதியொன்றில் அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கட்டிடமொன்றின் சுவரில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
காயமடைந்த மாணவர்கள் இருவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவரும் தலைக்கவசம் அணியாத காரணத்தினால் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

