
7 நாட்களில் நீரில் மூழ்கி 26 பேர் பலி -இலங்கையில் தொடரும் உயிரிழப்புக்கள்
புத்தாண்டு கொண்டாட்டங்களின் மத்தியில் நாட்டின் பல பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
தம்புத்தேகம, நல்லச்சிய ஏரியில் நேற்று முந்தினம் மாலை 3.30 அளவில் நீராடச் சென்ற தனியார் வகுப்பு ஆசிரியர் (29 வயது) மற்றும் உயர்தர வகுப்பு (A/L) மாணவர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரோட்டத்தில் சிக்கி சுமார் 300 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அங்கிருந்தவர்களால் அவர்கள் மீட்கப்பட்டு தம்புத்தேகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த ஆசிரியர் இக்கிரிவெவ பகுதியைச் சேர்ந்த தனுஷ்க உதயங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிலியந்தலை, தம்பே பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உறவினர்களுடன் புத்தாண்டு விழாவில் கலந்துகொண்ட 6 வயது சிறுமி நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்தார்.
பெரியவர்கள் பயன்படுத்தும் தடாகப் பகுதியில் சிறுமி மூழ்கிக் கிடப்பதைக் கண்டவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுமி பெலன்வத்தை பகுதியைச் சேர்ந்த இஹன்சா பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது தாய் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், தந்தையின் சகோதரியின் பராமரிப்பில் இச்சிறுமி வளர்ந்து வந்துள்ளார்.
பெந்தோட்டை கடலில் நீராடிக்கொண்டிருந்த போது அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயின்று வந்த மாணவர் எனத் தெரியவந்துள்ளது.
அனுராதபுரம், திசாவாவியில் பாதுகாப்பற்ற இடத்தில் நீராடிய 27 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கியபோது, அங்கிருந்த பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தாண்டு காலங்களில் நீர்நிலைகளில் நீராடும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

