
அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பெரிய திட்டம் உள்ளது ; மஹிந்த ராஜபக்ஷ
புத்தாண்டுக்குப் பின்னர் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பெரிய திட்டம் ஒன்று இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியல் சூழலில் மாற்றம் நிகழவுள்ளதாகவும், அதற்குத் தனது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு மே தினம் பௌர்ணமி நாளில் வருவதால், தனது கட்சி மே தினக் கொண்டாட்டங்களை நடத்தாது என்றும், அதற்குப் பதிலாக சமய நிகழ்வுகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில், நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று (20) நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கட்சியின் முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, தனக்கு புத்தாண்டு வெற்றிகரமாக அமைந்ததாகவும், இருப்பினும் இந்த ஆண்டு பொதுமக்கள் புத்தாண்டை வழக்கமான முறையில் கொண்டாடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

