
செம்மணி மனித புதைகுழி ; மூன்றாம் கட்ட அகழ்வு 27ஆம் திகதி ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழி பகுதியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இதுவரை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது, மொத்தமாக 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் வெற்றிகரமாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் எலும்புக்கூடுகள் காணப்படும் சாத்தியம் இருப்பதால், மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.
இதனை பரிசீலித்த நீதிமன்றம், சுமார் 8 வார காலப்பகுதிக்கான அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், கடந்த மாதங்களில் நிலவிய பருவமழை மற்றும் காலநிலை சீர்குலைவு காரணமாக, அகழ்வு பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, புதைகுழி பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டமை பணிகளை தற்காலிகமாக நிறுத்த வழிவகுத்தது.
இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகள் 45 நாட்கள் நீடித்து கடந்த செப்டெம்பர் 6ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், சுமார் 8 மாத இடைவெளிக்குப் பின்னர் மூன்றாம் கட்ட பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளன.
இதேவேளை, அகழ்வு பணிகளை 27ஆம் திகதி தொடங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக நாளை (22) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
பிரதீபன்

