
கொழும்பு – காலி வீதியில் கொட்டிய கருங்கல் துண்டுகள்நான்கு மோட்டார் சைக்கிள்கள் விபத்துகளுத்துறை – வெட்டுமகடை ஒரு வழிப்பாதை மூடப்பட்டது
கருங்கல் துண்டுகள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் பின்பக்க கதவு திறக்கப்பட்டதால், வீதியில் கருங்கல் துண்டுகள் கொட்டியுள்ளது. இதன் காரணமாக கொழும்பிலிருந்து காலி நோக்கிச் செல்லும் வீதியின் களுத்துறை – வெட்டுமகடை பகுதியில் ஒரு வழிப்பாதை மூடப்பட்டுள்ளது.
சுமார் 800 மீட்டர் தூரத்திற்கு வீதியில் கருங்கல் துண்டுகள் பரவியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் கொட்டியிருந்த கருங்கல் துண்டுகள் மீது பயணித்த நான்கு மோட்டார் சைக்கிள்கள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று (23) அதிகாலை கொழும்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற லொறியிலிருந்தே இவ்வாறு கருங்கல் துண்டுகள் கொட்டியுள்ளது.
பாதுகாப்பற்ற முறையிலும் கவனக்குறைவாகவும் கருங்கல் துண்டுகளை ஏற்றிச் சென்ற லொறியை களுத்துறை தெற்கு பொலிஸார் கைப்பற்றினர் .
தற்போது அந்தப் பகுதியில் போக்குவரத்து ஒரு வழிபாதையாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதியை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

