
இயலாமையுடைய நபர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடன் கலந்துரையாடல்
இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடனான கலந்துரையாடலொன்றை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் உயர்கல்வி, சமய மற்றும் கலாசார மையங்கள், இயலாமையுடைய நபர்களுக்கான அணுகல் வசதிகளைக் கொண்ட வீடுகள், தொழில்முயற்சிக்கான கடன் வசதிகள் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்ட துறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், 2024/2025-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்களில் 143 இயலாமையுடைய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 2025/2026-ஆம் ஆண்டில் 203 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 25 முதல் 50 மில்லியன் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறைந்த வருமானம் கொண்ட இயலாமையுடைய மாணவர்களுக்கு மாதம் ரூ. 5,000 மேலதிக உதவித்தொகையை வழங்கத் தீர்மானித்திருப்பதாகவும் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
மேலும், பல பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் இயலாமையுடைய மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பான முன்னோட்ட ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தரமான சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கவும், விபத்துகள் காரணமாக இயலாமையுடைய நபர்களாக்கப்படும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சக்கர நாற்காலிகள் போன்ற உதவி சாதனங்களை வழங்கும் திட்டத்தை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இங்கு தெரிவித்தது.
அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் உயரதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இயலாமையுடைய நபர்கள் மத வழிபாட்டுத் தலங்களை அணுகுவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து ஒன்றியத்தின் தலைவர், அமைச்சின் அதிகாரிகளுடைய கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
இதற்கமைய சமய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை இயலாமையுடைய நபர்கள் அணுகக் கூடிய வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக, மத்திய கலாச்சார நிதியம் மற்றும் தொல்பொருளியல் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வீடு, கட்டுமானம் மற்றும் நீர்வளங்கள் அமைச்சு மேல்மாகாணத்தில் இயலாமையுடைய நபர்களின் வீட்டு வசதிகளுக்காக ரூ.500 மில்லியனை ஒதுக்கியிருப்பதாகவும், 2026ஆம் ஆண்டு 9,700 வீடுகளை அமைப்பதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.
மேலும், இயலாமையுடைய நபர்களுக்காக விசேட கடன் திட்டமொன்றை கடைப்பிடிக்கவும், அவர்களின் விசேட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வீடுகளைக் கட்டுவதற்கான ஒரு ‘மாதிரித் திட்டத்தை’த் தயாரிப்பதற்கும் அமைச்சு இணக்கம் தெரிவித்தது.
இயலாமையுடைய நபர்களின் விசேட தேவைகளைக் கருத்தில் கொண்டு நெகிழ்வான மாதிரியில் வீடுகளை அமைப்பதற்கு அமைச்சு திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டனர்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், வங்கிகளுக்கும், இயலாமையுடைய தொழில்முனைவோருக்கும் இடையில் நம்பிக்கை தொடர்பான இடைவெளி காரணமாக கடன்பெறுவதில் சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டனர். இதற்கு அமைய இயலாமையுடைய நபர்களுக்காக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயுமாறு ஒன்றியத்தின் தலைவர் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
புதிய தயாரிப்புகளை வணிகமயமாக்குவதில் இயலாமையுடைய நபர்களுக்கு உதவும் ஆய்வுகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு கவனம் செலுத்துவாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்குத் தேவையான சாதனங்களைத் தயாரிக்க ஆராய்ச்சி குழுக்களை ஊக்குவிக்கவும், அவற்றை சந்தைக்குக் கொண்டு வருவதற்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
இதற்கு மேலதிகமாக, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு பாராளுமன்ற விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா, சுற்றுச்சூழல் போன்ற அமைச்சுக்களின் அதிகாரிகளும் ஒன்றியத்தில் தமது அமைச்சுசார்ந்த திட்டங்களை முன்வைத்தனர்.
ஒவ்வொரு அமைச்சினாலும் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களின் முன்னேற்றத்தை ஆறு மாதங்களில் மீண்டும் மீளாய்வு செய்யவும் ஒன்றியம் தீர்மானித்தது.
இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான பத்மசிறி பண்டார, சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான டி.கே. ஜெயசுந்தர, ஜகத் மனுவர்ண ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், இயலாமையுடைய பெண்களின் தேசிய ஒன்றியம், இலங்கை செவிப்புலனற்றோர் சங்கம், இயலாமையுடைய இளைஞர்களுக்கான வலையமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர். அத்துடன், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பார்வையாளர்களாக இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகளும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

