
இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழா ஜனாதிபதி அனுர தலைமையில் இன்று
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முயிசுவை வரவேற்பதற்கான உத்தியோகபூர்வ அரச விழா இன்று (04) நடைபெறுகிறது.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட உள்ளனர்.
நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களுடன் மாலைதீவு ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இந்த விஜயத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் வருகை தந்துள்ள அவர், மே மாதம் 06 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
மாலைதீவு ஜனாதிபதியின் வருகையையொட்டி மே 06 ஆம் திகதி வரை கொழும்பு நகரில் அவ்வப்போது விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

