
களனி கங்கை கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை
களனி கங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, தெஹிஓவிட்ட, எஹலியகொட, எட்டியாந்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய பகுதிகளை அண்மித்த தாழ்வான நிலப்பகுதிகளில் நீர்மட்ட உயர்வு மற்றும் சிறிய அளவிலான வெள்ள நிலை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலவும் மழை நிலவரம் மற்றும் களனி கங்கையில் பொருத்தப்பட்டுள்ள நீர்மட்ட அளவீட்டு கருவிகளின் தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தாழ்வான பகுதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும், அவசர தேவையின்றி வெள்ள அபாயம் காணப்படும் பகுதிகளுக்கு செல்லத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

