
காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் ஒரு பேரழிவு ஐ.நா. எச்சரிக்கை
காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் கூறியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினரை தோற்கடிக்கும் சாத்தியமோ அல்லது ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களை திரும்பப் பெறவோ முடியாது என அமைச்சரவை அமைச்சர்களில் பெரும்பான்மையானவர்கள் கூறியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நெதன்யாகு அலுவலகம் கூறியுள்ளது.
எனினும் இந்த நடவடிக்கை பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.அத்துடன் பணயக்கைதிகளுக்கு இந்த முடிவு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வெளியிட்டுள்ளது.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் எனவும் தமது நட்பு நாடுகள் உட்பட சர்வதேச அழுத்தத்தை, இஸ்ரேல் எதிர்கொள்ளும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை காசா நகரத்தை ஆக்கிரமிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐந்து கொள்கைகள் உள்ளடக்கிய அறிக்கையை நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பை நிராயுதமாக்குவது,
அனைத்து உயிருடன் இருக்கும் பணயக்கைதிகளையும் மற்றும் இறந்தவர்களையும் திருப்பி அனுப்புதல். காசா பகுதியை இராணுவ மயமாக்குதல் ,காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாடு, ஹமாஸ் அல்லது பாலஸ்தீன அதிகார சபை அல்லாத ஒரு மாற்று சிவில் அரசாங்கத்தை நிறுவுதல் என்ற ஐந்து கொள்கைகளை உள்ளடக்கிய வகையில் அறிக்கையை ஒன்றை நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
நெதன்யாகுவின் கருத்துக்களுக்கு இராணுவத் தலைமைத் தளபதி ( Lt Gen Eyal Zamir) லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்.
காசாவை முழுமையாக ஆக்கிரமிப்பது “ஒரு பொறியில் நுழைவதற்குச் சமம்” எனவும் உயிருள்ள பணயக்கைதிகளுக்கு அது ஆபத்தை விளைவிக்கும் எனவும் பிரதமரை எச்சரித்ததாக இஸ்ரேலிய ஊடக செயதிகள் கூறுகின்றன .
பணயக்கைதிகளின் பல குடும்பங்களும் தமது கவலைகளை தெரிவித்தனர். பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு உத்தரவாதம் அளிப்பதற்கான ஒரே வழி ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்குக் கொண்டுவருவதாகும் என அவர்கள் வலியுறுத்துகிறார்கள் .
நெதன்யாகுவின் இந்த முடிவினால் காசாவிலிருக்கும் அனைத்து உயிருள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளும், இந்த விரிவாக்கப்பட்ட தாக்குதலின் போது, அல்லது அவர்களை சிறைபிடித்த ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்படலாம் என மாரிவ் என்ற செய்தித்தாள் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

