
ஹார்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகளைப் பதிக்கும் எந்தவொரு படகையும் சுட்டு வீழ்த்தப்படும் – டிரம்ப்
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு படகையும் சுட்டு வீழ்த்த அமெரிக்கக் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இன்று தனது ‘Truth Social’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “எந்தவொரு தயக்கமும் காட்டத் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மூன்று மடங்கு வேகத்தில் முன்னெடுக்குமாறு அமெரிக்க கண்ணிவெடி அகற்றும் பிரிவினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கியதில் இருந்து, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணை பெருமளவில் முடக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் போக்கு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை இந்த அறிவிப்பு காட்டுகிறது.
ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா தற்போது ஒரு பதிலடி கடற்படை முற்றுகையை அமல்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இதுவரை 31 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நீரிணை முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று ட்ரம்ப் கூறிவருகிறார். “போலியான செய்திகளை வெளியிடுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும், அந்த நீரிணையை நாங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்துகிறோம்” என்று அவர் செவ்வாயன்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
போருக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது இந்த நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் டாங்கிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
வழக்கமாக உலக எண்ணெய் தேவையில் 20% இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் இந்த வாரம் முடிவடையவிருந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் அதனை ஒருதலைப்பட்சமாக நீட்டித்துள்ளதோடு, ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்குமாறு ஈரானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

