
கிழக்கு மாகாணத்தில் சுகாதார அபிவிருத்தி திட்டம் குறித்த சிறப்பு கலந்துரையாடல்
களப்பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்க முடியும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் சுகாதார அபிவிருத்திக்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் மேற்கொள்ளப்படும் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுகாதார நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் அண்மையில் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இங்கு, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 800,000 மக்களுக்கு சுகாதாரசேவையை வழங்கும் ஒரு பொது மருத்துவமனை, 02 அடிப்படை மருத்துவமனைகள், 07 பிராந்திய மருத்துவமனைகள், 18 ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையங்கள் மற்றும் 07 சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களைக் கொண்ட சுகாதார பாராமரிப்பு கட்டமைப்பு காணப்படுகிறது.
அத்துடன் அபிவிருத்தி திட்டங்களின் தற்போதைய நிலை, எதிர்கால சுகாதார அபிவிருத்தி திட்டங்கள், தற்போது காணப்படும் முக்கிய சுகாதாரப் பிரச்சினைகள், நிதி நிலைமை, ஆய்வக சேவையை நெறிப்படுத்துதல், சிகிச்சை சேவைகளை செயல்படுத்துதல், எதிர்கால சவால்கள், மனித மற்றும் பௌதீக வள அபிவிருத்தி, மருந்து மேலாண்மை, மருத்துவ உபகரணங்கள் பழுதுபார்ப்பு, களப்பணி சிக்கல்கள் மற்றும் போக்குவரத்துத் தேவைகள், ஊட்டச்சத்து பிரச்சினைகள் கர்ப்பிணிப்பெண்களின் இறப்பு மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்கைளின் இறப்பு தடுப்பூசி திட்டம், தொற்றா நோய் கட்டுப்பாட்டுத் திட்டம், காலாவதியான மருந்துகளை அகற்றுதல் மற்றும் மருத்துவக் கழிவுகளை அகற்றும் திட்டம் மற்றும் பல விஷயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அம்பாறை மாவட்ட சுகாதார நிறுவனங்களின் தலைவர்கள் என்ற வகையில், மாவட்ட மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதற்கான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், நிறுவன மட்டத்தில் அல்லாமல், தங்கள் மாகாணம், மாவட்டம் மற்றும் மக்கள் நலன் சம்பந்தமாக சிந்தித்து சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வழங்குமாறும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
நோயாளிகளை பராமரிப்பதற்கு குறைந்தளவு மனித வலு இருந்தபோதும் சுகாதாரத்துறையை சரிய விடாமல் பேணி காப்பாறியதற்காக சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அரச சேவைக்காக 70,000 பேரை நியமிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் கணிசமான அளவு சுகாதார சேவைக்காக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில், சுகாதார சேவையின் மனிதவளத்தை வலுப்படுத்தும் வகையில் தாதியர் சேவையில் ஆட்சேர்ப்பு மற்றும் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், தேவைக்கேற்ப வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகமானவர்களை வழங்குவதே இதன் நோக்கம் என்றும், கடந்த காலங்களில் இருந்த தவறான நியமன முறையை சரிசெய்து, அடுத்த 02 மாதங்களுக்குள் புதிய திட்டத்தின் கீழ் 1900 சுகாதார உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சுகாதாரத் துறையில் களப்பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டத்தை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்க முடியும் என்றும் அவர் கூறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடுப்பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை முடிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இதற்காக 45 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கிராமப்புற வளர்ச்சி மற்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் எல்.ஜி. வசந்த பியதிஸ்ஸ, கல்முனை தொகுதிக்கான தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் வசீன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பி.எஸ். எமி விமலரத்ன, அம்பாறை பொது மருத்துவமனையின் பணிப்பாளர் நிபுணர் டாக்டர் ரங்க சந்திரசேன, அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் தலைவர்கள், நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

