
மாவட்ட மட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் கல்விக்கான அபிவிருத்தித் திட்டம்
அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து விழிப்புணர்வூட்டல் மற்றும் அதனுடன் எழும் பிரச்சினைகளை அடையாளம் காணுதல், அத்துடன் மாகாண மட்டத்தில் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இந்த நாட்களில் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, அமைச்சர், மாகாண கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, கல்வி கட்டமைப்பில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
இந்த விஜயத்தின் போது, தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களை சந்தித்து பிரதமர் விசேட கலந்துரையாடலொன்றையும் நடத்தினார்.
அறிமுகப்படுத்தப்படும் அலகு முறைமையின் (Module System) முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் பிள்ளைகளுக்கு சுதந்திரமாகக் கல்வி கற்கக் கிடைக்கும் வாய்ப்பு மற்றும் அதன் உளவியல் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்த முறைமையின் ஊடாகக் கல்வியை வழங்குவது குறித்து ஆசிரியர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
அத்துடன், அவர்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து வினவிய அவர், சில பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கியதுடன், ஏனையவற்றைத் தீர்ப்பதற்கான பொறிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.
மேலும், இந்த விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மேலுமொரு விசேட அம்சம், அனைத்து அதிபர்களையும் சந்தித்தமையாகும். இதன் போது, எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அலகு முறைமை (Modular System) மற்றும் மதிப்பீட்டு முறைகள் குறித்து அதிபர்களுக்கு விசேடமாக விளக்கமளித்து, அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

