
உயர்கல்விக்கான தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கான மாணவர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் அமர்வு
உயர்கல்விக்கான தேசியக் கொள்கையை உருவாக்குவதற்காகப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பெற்றுக்கொள்ளும் விசேட அமர்வு, 2025 டிசம்பர் 18ஆம் திகதி இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள், கல்வி அமைச்சின் கீழுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களின் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். உயர்கல்விக்கான தேசியக் கொள்கையைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் இணைத் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா அவர்களின் தலைமையில் இந்த அமர்வு நடைபெற்றது.
தேசியக் கல்வி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு, இலங்கையின் உயர்கல்வித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதே இச்செயற்பாட்டின் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக, உலகளாவிய ரீதியில் தொழில்நுட்ப, அரசியல், சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஏற்பட்டு வரும் துரித மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளத்தக்க திறன்மிக்க மனித வளத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் பின்வரும் விடயங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது:
தொழிற்கல்வியைப் பலப்படுத்துதல் மற்றும் அதற்கான சமூக அங்கீகாரத்தை அதிகரித்தல். பல்கலைக்கழக கல்விசார் பணியாளர்களுக்கான தொழில்சார் ஊக்குவிப்புடன், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்ட உயர்கல்வி முறையை உருவாக்குதல்.
பிரதேசங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் வகையில், பிரதேச ரீதியிலான உயர்கல்வி நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்துதல். உயர்கல்விக்கான வாய்ப்புகளை எளிதாக்குதல் மற்றும் கற்பித்தல் தரத்தைப் பரிசீலிக்கும் முறையான பொறிமுறையை உருவாக்குதல். உயர்கல்வி நிறுவனக் கட்டமைப்பிற்குள் சமூகத்தின் பங்களிப்பிற்கு முன்னுரிமையளித்தல்.
சிறந்த உயர்கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக வரும் காலங்களில் அனைத்துத் தரப்பினருடனும் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த மாணவர்களுக்குத் தமது கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டது. இதன்போது, பெருமளவான மாணவப் பிரதிநிதிகள் கொள்கை வரைபில் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய துறைகள் குறித்துத் தமது ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல். வசந்த குமார உட்பட உயர்கல்விக் கொள்கைத் தயாரிப்புக்கான தேசியக் குழுவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

