முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பொதுச் சொத்துச் சட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பொதுச் சொத்துச் சட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் பயணம் மேற்கொள்ள அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக 2025 ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னாள் ஜனாதிபதி வருகை தந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவரை ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொண்டு, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய மூன்று சரீரப் பிணைகளில் முன்னாள் ஜனாதிபதியை விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், வழக்கினை 2025 ஒக்டோபர் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

2025 ஒக்டோபர் 29 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இதற்கான விசாரணைகளை 2026 ஜனவரி 28 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் பிரகாரம், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )