
போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்து ஓட்டினால் ஓட்டுநர் உரிமமும் போக்குவரத்து அனுமதியும் இரத்து
போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்களை அரசு மூலம் ரத்து செய்வதுடன், அத்தகைய பேருந்துகளின் பயணிகள் போக்குவரத்து அனுமதிகளையும் (Route Permit) இரத்து செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான துணை பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்தார்.
மேலும் அவர் , ”போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்தினால், குற்றவியல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை சமீபத்தில் கொழும்பு பஸ்டியன் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்டதுடன், அங்கு 59 பேருந்துகள் பரிசோதிக்கப்பட்டு, 10 ஓட்டுநர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், இந்த விசேட நடவடிக்கைகள் காலி, மாத்தறை, கம்பஹா, குருணாகல் உள்ளிட்ட நாடு முழுவதும் மேற்கொள்ளதிட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக சுமார் 5,000 போக்குவரத்து காவல் அதிகாரிகளை ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய குற்றச்சாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டில் 94 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்வருடத்தில் கடந்த 23 நாட்களுக்குள் மட்டும் 494 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், அத்தகைய பேருந்துகளின் பயணிகள் போக்குவரத்து அனுமதிகளை ரத்து செய்வதுவரை சட்டத்தை கடுமையாக அமல்படுத்த போக்குவரத்து அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சு மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து இந்த நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் துணை காவல் மா அதிபர் தெரிவித்தார்.

