
சூப்பர் 8 சுற்றில் இன்று நியூஸிலாந்து – பாகிஸ்தான் பலப்பரீட்சை !
ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அடுத்த கட்டமான சூப்பர் 8 சுற்று இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்றின் முதலாவது போட்டியில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
20 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் நேற்றுடன் (20) முடிவடைந்துள்ளன.
லீக் சுற்றின் முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் ஜிம்பாப்வே, இலங்கை, ‘சி’ பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, ‘டி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்த 8 அணிகளும் குரூப் 1, குரூப் 2 என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் குரூப் 1-ல் இந்தியா, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடம் பெற்றுள்ளன.
குரூப் 2-ல் நியூஸிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணி தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் பாகிஸ்தான், நியூஸிலாந்துடன் மோதுகிறது.
நியூஸிலாந்து அணி நடப்பு தொடரில் தனது லீக் ஆட்டங்களை இந்தியாவில் விளையாடிய நிலையில் தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்களை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கை ஆடுகளங்களில் விளையாட உள்ளது.
மறுபுறம் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது லீக் ஆட்டங்களை முழுமையாக இலங்கையில் விளையாடி உள்ளதால் ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிந்திருக்கக்கூடும்.
இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள், மந்தமான ஆடுகளத்தில் திறம்பட செயல்பட தேவையான வேகம் மற்றும் நீளத்தை அறிந்துவைத்துள்ளனர்.
இது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது

