
ஈரான் மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகள் நிராகரிப்பு ; ஜனாதிபதி விளக்கம்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஈரானியக் கப்பல்கள் நாட்டின் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாததற்கான காரணத்தை விளக்கினார்.
அவரது உரையில், ஈரான் கடந்த பிப்ரவரி 26 அன்று மார்ச் 9–13 திகதிகளில் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு கப்பல்களை அனுப்ப அனுமதி கோரியிருந்ததாக தெரிவித்தார்.
இதேவேளை, அதே நாளில் அமெரிக்காவின் சார்பிலும், கடற்படைக்கு உட்பட்ட இரண்டு போர் விமானங்களை மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்ப அனுமதி கோரப்பட்டதாகவும் கூறினார்.
இரு கோரிக்கைகளும் ஒரே நேரத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், இலங்கை ஒரு நடுநிலை நாடாக இருப்பதால், எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாக இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை கடைப்பிடித்து, இரண்டிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
“எந்த அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல், நமது நாட்டின் கௌரவம், நீதி மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், இத்தகைய அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தால், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு பரவக்கூடிய அபாயம் இருந்திருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

