மட்டக்களப்பு பாழடைந்த கிணற்றிலிருந்து உயிருடன் ஒரு பெண்ணும் சடலமாக மற்றொரு பெண்ணும் மீட்கப்பட்ட சம்பவத்தின் மர்மங்கள் அம்பலமானது : மூவர் கைது

மட்டக்களப்பு பாழடைந்த கிணற்றிலிருந்து உயிருடன் ஒரு பெண்ணும் சடலமாக மற்றொரு பெண்ணும் மீட்கப்பட்ட சம்பவத்தின் மர்மங்கள் அம்பலமானது : மூவர் கைது

மட்டக்களப்பு, நெல்லிக்காடு பகுதியில் வயல்வெளியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டமை மற்றும் அதே கிணற்றிலிருந்து மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவதின் மர்மத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர் .

மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் கணவரின் சகோதரன் (தம்பி) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (19) வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்குச் சென்ற இளம் தாய் ஒருவரும் அவரது இரண்டரை வயது குழந்தையும் காணாமல் போயிருந்தனர்.

மீட்பு நடவடிக்கை: மறுநாள் அந்த தாய் பாழடைந்த கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து வந்த நாளில் குழந்தை அருகிலுள்ள வயல்வெளியில் இருந்து மீட்கப்பட்டது.

அத்துடன் அதே கிணற்றைச் சோதனையிட்டபோது, அங்கிருந்து அடையாளம் தெரியாத மற்றொரு பெண்ணின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட 26 வயது பெண், அவரது 34 வயது கணவன் மற்றும் 22 வயது மச்சான் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பல தகவல் தெரியவந்துள்ளது.

பஸ்சிற்காக காத்திருந்த அந்த இளம் தாயிடம், 100 ரூபா கட்டணத்திற்கு மட்டக்களப்பு நகருக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி முச்சக்கர வண்டியில் ஏற்றியுள்ளனர்.

அந்தத் இளம் தாய் நகரில் அடகு வைத்த நகைகளை மீட்கச் சென்றபோது, சந்தேகநபரான பெண் அவருடன் நட்பாகப் பழகி பின்தொடர்ந்துள்ளார்.

பின்னர் அவருக்கு பழச்சாற்றில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். அவர் மயக்கமடைந்ததும் அவரிடமிருந்த 5 பவுன் தாலி மற்றும் ஒரு பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துள்ளனர்.

குழந்தையை வயல்வெளியில் விட்டுவிட்டு, மயக்க நிலையில் இருந்த தாயை நெல்லிக்காடு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

கொள்ளையடித்த நகைகளை அவர்கள் அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மற்றைய பெண்ணின் சடலமும் இதே குழுவினரால் செய்யப்பட்ட கொலையே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட அந்த பெண்ணிற்கும் இதே முறையில் மயக்க மருந்து கொடுத்து, நகைகளைக் கொள்ளையடித்த பின் கிணற்றில் வீசியதாக சந்தேகநபர்கள் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அறிமுகமில்லாத நபர்களிடம் எவ்வித உணவு அல்லது பானங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )