
எரிபொருள் கையிருப்பு போதுமானது ; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
நாட்டின் எரிபொருள் தேவையை விட 10 சதவீதத்திற்கும் அதிகமான அளவு முன்கூட்டியே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அவசர காலத்திற்காக அதிக அளவில் எரிபொருளைச் சேமித்து வைக்காத பட்சத்தில், நாட்டிற்குத் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் இருக்கும் என அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
‘தெரண பிக் போக்கஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், மே மாதம் நடுப்பகுதி வரை நாட்டிற்குப் போதுமான எரிபொருள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இங்கு நிலவும் பிரச்சினை எரிபொருள் பற்றாக்குறை அல்ல, பயன்படுத்தும் முறைமையே என அவர் விளக்கமளித்தார்.
“40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் ஒரு கப்பல் வரும்போது, அதற்கேற்ப இடைவெளி உருவாக்கப்படுகின்றது. ஆனால் கடந்த காலங்களில் டீசல் பயன்பாடு 150 சதவீதம் வரை அதிகரித்ததால், தேவைக்கும் மேல் நுகர்வு ஏற்பட்டது,” என அவர் கூறினார்.
QR குறியீட்டு முறை நடைமுறையில் இருப்பதால், மாதாந்திர தேவைக்கேற்ப எரிபொருள் நாட்டுக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சிலர் வழக்கத்தை விட அதிக அளவில் எரிபொருளை சேமித்து வைப்பதே தற்காலிக பற்றாக்குறைக்கு காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டினார். சாதாரண நுகர்வு முறையைப் பின்பற்றினால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

