
ஏப்ரல் வரை கடும் வெப்பம் தொடரும் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ், சர்வதேச ரீதியில் கடந்த சில ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை 1 முதல் 1.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரித்துள்ளதே தற்போதைய வெப்ப நிலைக்கு முக்கிய காரணம் என தெரிவித்தார்.
மேலும், பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நினோ காலநிலை மாற்றத்தினால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மேலும் உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் விளைவாக, எதிர்வரும் வாரங்களில் நாட்டின் வெப்பநிலை வழமையை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தற்போதைய வரட்சியான காலநிலை ஏப்ரல் மாதம் முழுவதும் நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சப்ரகமுவ, வடமேல், மேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களுடன், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களும் கடும் வெப்பத்தால் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன.
கடும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

