
விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்குநர் கட்டணம் உயர்வு
விருந்து மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்களின் சேவைகளுக்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்கள் இன்று (08) முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை விழா மண்டபம் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் அகில ஜெயரத்ன கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், மே மாதம் முதல் புதிய ஆர்டர்களுக்கான கட்டணம் 15% முதல் 20% வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் மதிப்புக்கூட்டு வரி (VAT) அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், தற்போதைய ஆர்டர்களுக்கே 10% வரை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டது.
பொருட்களின் விலை உயர்வால் தங்களது தொழில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், தொழிலை நிலைநிறுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் விளக்கியது.
இருப்பினும், அரசாங்கத்திடமிருந்து பொருத்தமான நிவாரணம் அல்லது தீர்வுகள் கிடைத்தால், கட்டண உயர்வை மீண்டும் பரிசீலித்து குறைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அகில இலங்கை விழா மண்டபம் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

