
“நிலக்கரி மோசடி : முழு அமைச்சரவை பதவி விலக வேண்டும்” – ஜி.எல். பீரிஸ்
தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் ஓர் அமைச்சரை மட்டும் பலிகொடுத்துவிட்டு அரசு தப்பிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று (23) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், குறித்த நிலக்கரி கொள்வனவு ஒரு தனிப்பட்ட அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டதல்ல என்றும், அரசின் திட்டமிடலுடன் இடம்பெற்ற மாபெரும் மோசடியாகும் என்றும் குற்றஞ்சாட்டினார்.
அனுபவமற்ற மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனத்துக்கு இத்தகைய பெரிய ஒப்பந்தம் வழங்கப்பட்டமைக்கு முழு அமைச்சரவையும் பொறுப்பேற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மக்களின் வரிப்பணத்துடன் தொடர்புடைய இந்த பரிமாற்றத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனையோ அனுமதியோ பெறப்படவில்லை என்றும், இது சட்டத்தை மீறும் செயல் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கொண்டுவரப்பட்ட 12 கப்பல்களிலும் தரம் குறைந்த நிலக்கரி இருந்ததாகவும், ஒப்பந்தப்படி அவற்றை நிராகரிக்கும் அதிகாரம் இருந்தபோதிலும் அரசு அதனைச் செய்யாமல் தவிர்த்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பயன்படுத்தப்பட்ட ஆய்வுகூடத்திற்கே தேவையான தகுதி இல்லையெனவும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் கடந்த கால மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விட பல மடங்கு பெரியதாகும் என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒரு கருவி மட்டுமே என்றும், ஒட்டுமொத்த அமைச்சரவையும் இதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமைச்சர் ஒருவர் பதவி விலகுவதால் இந்தப் பிரச்சினை முடிவடையாது என தெரிவித்த அவர், நாட்டின் மக்களுக்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து முழு அரசும் பதவி விலக வேண்டும் என்றும், இல்லையெனில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

