
சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் ; இருவர் கைது
சீனாவில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இரண்டு வெளிநாட்டு பயணிகள் இன்று (24) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான சிகரெட்டுகள் இந்த நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 53 வயதுடைய வங்கதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின் படி, இந்த சிகரெட் இருப்பு சீனாவில் இருந்து ஒரு சீன நாட்டவரால் வாங்கப்பட்டு, கம்போடியா வழியாக மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பின்னர் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதனை விமான நிலையத்திலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த வங்கதேச நாட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களிடம் இருந்த ஐந்து பயணப் பைகளில் இருந்து, சீனாவில் தயாரிக்கப்பட்ட 28,400 சிகரெட்டுகள் அடங்கிய 412 அட்டைப் பெட்டிகள் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைக்காக சுங்கத்துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

