
யோஷித – டெய்சிக்கு எதிரான வழக்கு ; ஜூன் 10 க்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஜூன் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து, இதே குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மற்றொரு வழக்கும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், அந்த வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கிற்கும் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதாக அரசு தரப்பு சுட்டிக்காட்டியது. வழக்கு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அறிவிக்க ஒரு திகதியை வழங்குமாறும் நீதிமன்றத்திடம் கோரப்பட்டது.
இதன்படி, ஜூன் 10ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் வழக்கின் முன்னேற்றம் குறித்து அறிவிக்குமாறும் அறிவுறுத்தினார்.

