பிரதமரின் பங்குபற்றுதலுடன் 2025 வெள்ளித்திரை விருது விழா

பிரதமரின் பங்குபற்றுதலுடன் 2025 வெள்ளித்திரை விருது விழா

2025 வெள்ளித்திரை (Silver Screen) விருது விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஜூன் 13ஆந் திகதி பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

1970-1975 ஆண்டுகளில் சுதேச சினிமாவுக்கு வளம் சேர்த்த கலைஞர்களை பாராட்டுவதே இந்த ஆண்டு விருது விழாவின் நோக்கமாகும் . முன்னணி நடிகை ஐரங்கனி சேரசிங்கவுக்கு சுமித் பிபிலே நினைவு தங்க விருதை பிரதமர் வழங்கி வைத்தார். பத்மஸ்ரீ கொடிகார, தினேஷ் பிரியசாத், இந்திராணி பெரேரா ஆகிய கலைஞர்களுக்கும் பாராட்டு விருதுகளை பிரதமர் வழங்கினார்.

விருது வழங்கும் விழா நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ,

உலகின் மிகவும் ஜனரஞ்சகமான கலை வடிவங்களில் ஒன்றான சினிமாவின் முன்னேற்றத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த சிரேஷ்ட கலைஞர்களைப் பாராட்டுவது, அவர்களை பராமரிப்பது மற்றும் அனைத்துத் தேவையான சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்காக முன்னிற்பது முழு தேசத்தினதும் முழுமையான கடமையாக நான் கருதுகிறேன்.

image

2025 ஆம் ஆண்டு சுதேச சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வேளையில், சினிமாவின் இடத்தை தரத்திலும், அளவிலும் சிறப்பாக கட்டியெழுப்புவதற்கு பங்களித்த, ஊக்குவித்த மற்றும் தியாகம் செய்த மக்களுக்கு தேசத்தின் கௌரவத்தை வழங்குவது எமது நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விடயமாக நான் உணர்கிறேன்.

சுமித் பிபிலே அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த மன்றம், அவரது மகள் சனோஜா பிபிலே அவர்களால் நடத்தப்படுவது பாராட்டத்தக்கது.

image

பேசும் படங்கள் முதல் 70களின் முற்பகுதி வரை சினிமாவுக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்த பல கலைஞர்கள் ஏற்கனவே வெள்ளித்திரை விருதைப் பெற்றுள்ளனர் என்பதை அறிவது மகிழ்ச்சியளிக்கும் விடயம்.

இந்த நேரத்தில் நாம் மறைந்த நடிகை மாலனி பொன்சேகாவையும் நினைவுகூர வேண்டும். அவர் ஏராளமான விருதுகளைப் பெற்றவர். ஆனால் அந்த விருதுகளைப் பார்க்கிலும் மக்களின் அன்பை வென்றிருந்தார்.

சிங்கள சினிமாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த ஆண்டு விருதுகளைப் பெறும் திரைப்பட கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் உட்பட அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

image

மேலும், திருமதி சனோஜா பிபிலே, திரு. சுனில் டி. பெர்னாண்டோ மற்றும் சில்வர் ஸ்க்ரீன் அமைப்பின் அனைத்து செயற்பாட்டாளர்களுக்கும், இந்த விழாவை வெற்றிகரமாக்க இதுபோன்ற அர்த்தமுள்ள விடயங்களை மக்கள்மயப்படுத்த உதவும் அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கும், கௌரவ ஜனாதிபதி தலைமையிலான முழு அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், இந்தப் பணியை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினருக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமருடன் கலாசாரம் மற்றும் புத்த சாசன அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மஹதிவுல்வெவ, சிரேஷ்ட கலைஞர் ரவீந்திர ரன்தெனிய மற்றும் பல கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )