
அஸ்வெசும வேலைத்திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்து பயனளிக்கும் ஓர் வேலைத்திட்டமாக இதனை முன்னெடுங்கள்
நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்று (20) எழுப்பிய கேள்வி.
இந்நாட்டிலுள்ள வறிய குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கில் முன்னைய அரசாங்கத்தால் அஸ்வெசும வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் பயனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஓர் முயற்சியாக இருந்தபோதிலும், வேலைத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக உண்மையிலேயே சலுகைகளைப் பெறத் தகுதியானவர்கள் சலுகைகளைப் பெறவில்லை என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த குறைபாடுகளை முடியுமான அளவில் தவிர்த்துக் கொள்வதற்கு, சலுகைகள் வழங்கும் வழிமுறை, அவர்களின் தகுதிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகளை தொடர்ச்சியாக மதிப்பிடும் திட்டமொன்றை முன்னெடுப்பது மிக முக்கியமான விடயமாகும்.
எனவே, பின்வரும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திடமிருந்து தெளிவான பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.
பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு கிலோ கரட்டின் விலை ரூ.800க்கும் அதிகமாக காணப்படுகின்றன. போஞ்சி ஒரு கிலோ ரூ.650 ஆகும். ஒரு கிலோ மிளகாய் ரூ.800 ஆகும். ஒரு கிலோ பாகற்காய் 450 ரூபா என்றவாறு விலை ஏறியுள்ளன. உணவு மற்றும் பானங்களின் விலைகள் கூட அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் பயனாளி மக்கள் தானிய உற்பத்திகளில் கூட ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களினது தானிய உற்பத்திகளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை.
- அஸ்வெசும வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதன் நோக்கங்கள் யாது ?
- அஸ்வெசும வேலைத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகள் இதுவரை அடையப்பட்டுள்ளனவா? ஆமெனின், அடையப்பட்டுள்ள இலக்குகள் யாவை?
- இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வருடாந்தம் வழங்கப்பட்ட சலுகை பெருநர்களின் எண்ணிக்கையை கட்டம் கட்டமாக தனித்தனியாக சமர்ப்பிக்க முடியுமா? இதற்காக வருடாந்தம் செலவிடப்படும் மொத்தத் தொகை எவ்வளவு?
- அஸ்வெசும சலுகை பயனாளிகளை வகைப்படுத்த பின்பற்றப்பட்ட அளவுகோல்கள் யாது?
- அவ்வாறு பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பின்பற்றப்படும் வழிமுறை விஞ்ஞான ரீதியாகப் இலங்கைக்குப் பொருத்தமான வழிமுறையா ? இந்த வழிமுறை தொடர்பில் அரசாங்கம் திருப்தி அடைகிறதா?
உலக வங்கி மற்றும் LIRN Asia அறிக்கையின்படி, வறுமை அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் நாம் பின்பற்றும் வழிமுறை மாற வேண்டும்.
- புதிய அரசாங்கத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மை உதவிகளைப் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 8 இலட்சம் விண்ணப்பங்கள் தற்போது மேற்கூறிய வகைப்படுத்தலின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனவா?
- 2025 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக உலக வங்கி சமர்ப்பித்த அறிக்கை மற்றும் வறுமை குறித்த அங்கீகரிக்கப்பட்ட ஏனைய ஆராய்ச்சி தரவுகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா?
- ஆமெனின், அந்தத் தரவுகளின் அடிப்படையில் அஸ்வெசும திட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறதா? இல்லையென்றால், அரசாங்கத்திடம் காணப்படும் மாற்றுத் திட்டம் யாது ?
- வறுமையை ஒழிக்க அரசாங்கம் குறிப்பிட்டதொரு வேலைத்திட்டத்தை முன்வைக்குமா? இதன் மூலம் அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்படும் மைல்கற்கள் யாவை?
அவ்வாறே, இன்று, முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிவருகின்றனர். இந்த உதவிக் கொடுப்பனவுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், முதலீட்டு ஊக்குவிப்பு மூலமும் இந்த வறுமையை ஒழிக்க முடியும்.
சிங்கப்பூரின் 8 மில்லியன் முதலீடான, 500 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி, 2.5 மில்லியன் Foam Mattress ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனம், 6 மாதங்களாக தனது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. வணிகத் திணைக்களம் மற்றும் முதலீட்டு சபை என்பவற்றின் வரம்புகளின் பிரகாரம் 50,000 ஒதுக்கீடு மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என வரையறுத்துள்ளது. இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதனால் முதலீட்டாளர்கள் எமது நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

