
புதிய சீர்திருத்த நடவடிக்கைகளை பரிசீலித்து ஒழுங்குபடுத்துங்கள்
தேசிய கல்வி ஆணைக்குழுவின் புதிய அதிகாரிகள் குழுவிற்கும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையே தேசிய கல்வி ஆணையக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது, ஆணைக்குழுவின் புதிய அதிகாரிகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புதிய கல்வி சீர்திருத்தங்களுக்காக தான் மேற்கொண்டு வரும் பங்கு குறித்தும் பிரதமர் விளக்கமளித்தார்.
புதிய கல்வி சீர்திருத்தத்தை 2026 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும், கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் அதற்காக முறையான முறையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
அத்துடன், புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் தேசிய கல்வி ஆணைக்குழுவின் பங்கு குறித்து இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், ஆணைக்குழு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அமைச்சர் விளக்கினார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தும்போது ஆய்வுகளை நடத்துவதற்கும் பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு பணிக்கப்படும் என்று கூறிய அமைச்சர், கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு ஆகியவை இணைந்து கல்விக் கொள்கைகளை தொடர்ந்தும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் மேலும் வலியுறுத்தினார்.

