வகுப்பறை ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைக்க வேண்டும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

வகுப்பறை ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைக்க வேண்டும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புதிய கல்வி சீர்திருத்தத்திற்கமைய ஒரு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைக்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்கள் இருப்பார்களாயின் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமில்லை எனவும் அவர்
தெரிவித்தார்.

புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளை அறிவுறுத்தும் நான்காவது நிகழ்வு இன்று காலியில் உள்ள தட்சிணபாய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

முதலில், கல்வி சீர்திருத்தத்திற்கான உங்கள் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உண்மையில் எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஒரு புதிய கல்வி சீர்திருத்தத்தை செயல்படுத்துவது குறித்து விவாதித்து திட்டமிட்டோம்.

அரசாங்கக் கொள்கைகளுக்கு ஏற்ப நிபுணர்களுடன் கலந்துரையாடினோம், பல்வேறு துறைகளிடமிருந்து கருத்துக்களைப் பெற்றோம் , கொள்கைகளை வகுத்தோம்.

பாடத்திட்டத்தில் மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் தொழில்முறைத் திறனை அதிகரிப்பது, புதிய சீர்திருத்தத்திற்கு ஏற்ப கல்வி நிர்வாகக் கட்டமைப்பை சீர்திருத்துவது மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான மற்றும் தரமான கல்வியை வழங்க தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலும் புதிய கல்வி சீர்திருத்தத்திற்கமைய நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

இது தனிப்பட்ட நலனுக்காக செய்யும் ஒரு விடயமல்ல , நாட்டின் தேவைகளைப் புரிந்துகொண்டு, நாம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு என்ற உணர்வுடன் நாம் இதை வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.

சமூகத்தில் நேர்மையான நோக்கங்களுடன் இதைப் புரிந்துகொண்டு செயற்படுபவர்களும் உள்ளனர் , சரியான புரிதல் இல்லாமல் விமர்சிப்பவர்களும் உள்ளனர். அரசியல் ஆதாயத்திற்காக விமர்சிப்பவர்களும் உள்ளனர்.

இந்த சீர்திருத்தத்தை செயல்படுத்துவது ஒரு சவால் .
இது எளிதான விடயமல்ல என்பதை நாங்கள் அறிவோம். இவற்றையெல்லாம் சரிசெய்யவே மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்.

‣புதிய கல்வி சீர்திருத்தத்திற்காக மேற்கொள்ளப்படவேண்டிய கடமைகள் பல உள்ளன. ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் 16 ஆண்டுகளில் மாறவில்லை, அவற்றையெல்லாம் மாற்ற வேண்டும். ஆசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சி வழங்கப்பட வேண்டும்” எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )