
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை மேலும் நீடிப்பு
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடையை ஒகஸ்ட் 24ஆம் திகதி வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.
இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3:50 ற்கு அமுலுக்கு வந்த விமான வீரர்களுக்கான அறிவிப்பின்படி , இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் எந்த ஒரு விமானமோ, அல்லது இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட ராணுவம் மற்றும் சிவில் விமானங்களோ பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தடை ஓகஸ்ட் 24 காலை 5:19 வரை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி இந்தியா தடைவிதித்தது
பின்னர் இந்த தடை ஜூன் 24 வரையும், தொடர்ந்து ஜூலை 24-ஆம் திகதி வரையும் நீட்டிக்கப்பட்டது.
இதேவேளை இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த முடியாத வகையில் பாகிஸ்தான் அரசும் ஜூலை 24ஆம் திகதிவரை வான்வெளியை மூட உத்தரவிட்டது.
இந்த நிலையில் தற்போது இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடையை ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி வரை நீட்டித்துள்ளதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு விதிகளின்படி, ஒரு மாதம் காலம் வரை மட்டுமே ஒரு நாடு தன்னுடைய வான்வெளியை மூட முடியும் என தெரிவிக்கப்படுகிறது .

