
தீயில் கருகி உயிரிழந்த 8 வயது குழந்தையின் தாய் தந்தை தாயின் காதலன் ஆகியோருக்கு விளக்கமறியல்
பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ பகுதியில்
8 வயது குழந்தை தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தாய், தந்தை மற்றும் தாயின் காதலன் ஆகியோர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை பலாங்கொடை பதில் நீதவான் தேசபந்து சூரியபடபெந்தி முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குழந்தைக்கு பாதுகாப்பு வழங்குவதில் அலட்சியபோக்குடன் செயற்பட்ட குற்றச்சாட்டில் தாய் மற்றும் தந்தையை விளக்கமறியலில் வைக்க பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை , பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர், இறுதி சடங்குகளுக்காக உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 3 மணியளவில் பலாங்கொடை தெஹிகஸ்தலாவ பகுதியில் வீடு ஒன்று பற்றியெரிந்த நிலையில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த 8 வயது ஆண் குழந்தை தீயில் கருகி உயிரிழந்தது .
பொலிஸ் அவசர தொலைபேசி எண்ணுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் குழந்தையின் உடலை மீட்டனர்.
தீ விபத்து இடம்பெற்ற போது உயிரிழந்த குழந்தையின் தந்தை வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தந்தையும் தாயும் இந்த தீ விபத்தில் சிக்காததால் குழந்தையில் மரணத்தில் சந்தேகம் எழுந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
குழந்தையின் தந்தை போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், குடும்ப தகராறு காரணமாக தாயும் தந்தையும் பிரிந்து சென்றதாகவும் தாய் வேறொரு நபருடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது .
இந்த நிலையில் சம்பவ தினத்தில் பெற்றோருக்கிடையில் தகராறு ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்திருந்தனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையடுத்து உயிரிழந்த குழந்தையின் தாய், தந்தை மற்றும் தாயின் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

