
தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலத்துக்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி
பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலத்துக்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவருமான (வைத்தியர்) நஜித் இந்திக்க தலைமையில் இக்குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்தத் திருத்தத்தின் ஊடாக கணக்காய்வுக்குட்படும் நிறுவனமொன்றில் கணக்காய்வொன்றை நிறைவேற்றும் போது கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் கண்டுபிடிக்கப்படும் ஏதேனும் மோசடி, ஊழல் அல்லது கையாடல் தொடர்பில் சட்ட நடவடிக்கைக்காக சட்ட வலுவுறுத்தல் அதிகாரிக்கு முறைப்பாடு செய்வதற்கு அவசியமான ஏற்பாடுகளைச் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், கணக்காய்வுக்குட்படும் நிறுவனமொன்றின் ஏதேனும் கொடுக்கல்வாங்கலிலான ஏதேனும் குறைபாட்டின் அல்லது இழப்பின் தொகைமீதான மிகைக்கட்டணமொன்றை விதிப்பதற்கு மிகைக்கட்டணப் பரிசீலணைக் குழுவுக்கு விதப்புரை செய்வதற்கு கணக்காய்வாளர் தலைமையதிபதிக்குத் தத்துவமளிப்பதற்கும், கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் செய்யப்பட்ட விதப்புரைகளைக் கவனத்திற்கொள்வதற்கும் மற்றும் மிகைக்கட்டணமொன்றாக விதிக்கப்படவேண்டிய தொகையை முடிவு செய்வதற்கும் மிகைக்கட்டணப் பரிசீலணைக் குழுவுக்குத் தத்துவமளிப்பதற்கும், அத்துடன் மிகைக்கட்டணத் தொகையைத் தீர்மானிப்பதிலும் மிகைக்கட்டணத்தை அறவிடுவதிலும் மிகைக்கட்டணப் பரிசீலனைக் குழுவினால் கடைப்பிடிக்கப்படவேண்டிய நடவடிக்கைமுறையை குறித்துரைப்பதும் இந்தத் திருத்தச் சட்டமூலத்தின் நோக்கமாகும்.

மேற்குறித்த விடயம் தொடர்பாக குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் 2024 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கை, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயலாற்றுகை அறிக்கைகள் மற்றும் சட்டவரைஞர் திணைக்களத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கை என்பனவும் குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சனாதிபதி சட்டத்தரணி) பைஸர் முஸ்தபா, ஜீ.ஜீ. பொன்னம்பலம், எம்.கே. எம். அஸ்லம், சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன், தர்மப்ரிய விஜேசிங்ஹ மற்றும் சந்தன சூரியஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

