பாடசாலைகளில் உள்ள விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து பிரதமர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கலந்துரையாடல்

பாடசாலைகளில் உள்ள விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து பிரதமர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கலந்துரையாடல்

பாடசாலைகளில் நிலவும் விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து, கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை ஆகஸ்ட் 21 அன்று பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கல்வி அமைச்சுக்கும் விளையாட்டு அமைச்சுக்கும் இடையில் ஒரு தொடர்பாடலை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து இருதரப்பு அதிகாரிகளும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், விளையாட்டுச் சங்கங்களில் நிலவும் அனுமதிப்பத்திரப் பிரச்சினைகள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களால் ஏற்படும் வன்முறைகள், பாடசாலை விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல் ஆகியன தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து மாணவர்களும் விளையாட்டில் பங்கேற்கக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதன் அவசியத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, தற்போதைய போட்டி மனப்பான்மைக்கு மாறாக, மாணவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை முதன்மைப்படுத்தும் விளையாட்டுக் கலாசாரத்தை பாடசாலைகளில் உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு கல்வி அமைச்சும் விளையாட்டு அமைச்சும் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பாடசாலைக் கல்விக்குப் பிறகு உயர்கல்விக்காக விளையாட்டுத் துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் சர்வதேசப் போட்டிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், விளையாட்டுப் போட்டிகளுக்கான விண்ணப்பங்களின்போது கணினித் தரவு முறைமை ஊடாக விண்ணப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, மேலதிக செயலாளர் (இணை பாடத்திட்டம்) உதாரா திக்கும்புர, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, தேசிய விளையாட்டு சபைத் தலைவர் பிரியந்த ஏக்கநாயக்க உட்பட கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )