
போர் நிறுத்த திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.
கடந்த திங்களன்று அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசித்து வந்த ஹமாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயிருடன் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்த கைதிகளின் உடல்களையும் திரும்ப ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டபடி, ஒருமித்த கருத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம் காசா பகுதியை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், உடனடி உதவி வழங்குவதற்கும், அரபு, நாடுகள் மற்றும் ட்ரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும் திட்டத்தின் பிற விவரங்களை விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தைநடத்த விரும்புவதாக ஹமாஸ் கூறியுள்ளது.

