
தர்மாச்சாரிய பரீட்சையின் போது ஏற்பட்ட முறைகேடுகளுக்கு உடனடியாக தீர்வுகளைப் பெற்றுக் கொடுங்கள்
தர்மாச்சாரிய பரீட்சை குறித்து எழுந்துள்ள பிரச்சினை மற்றும் ஆசிரியர் தொழிலில் காணப்படும் பல பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) கல்வி அமைச்சரினதும் பாராளுமன்றத்தினதும் கவனத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார்.
தர்மாச்சாரிய பரீட்சை 2019.05.25 ஆம் திகதி நடத்தப்பட்டன. 2020.10.16 ஆம் திகதி அன்று பெறுபேறுகள் இல்லாமல் நேர்காணல்கள் நடத்தப்பட்டுள்ளன. பின்னர் 2024 இல் தான் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இங்கு பெரும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.
மீண்டும் மீண்டும் பரீட்சைகளை நடத்துவதற்குப் பதிலாக, முன்னர் நடத்திய பரீட்சைகளின் பெறுபேறுகளினது அடிப்படையில் நியமனங்களை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
கொரோனா காலங்களில் 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். இந்த சபையில் இருக்கும் அமைச்சர்கள் கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நிரந்தர ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்துவோம் என்று வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.
குறிப்பாக 52,000 பட்டதாரிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படும் தருணத்தில், கொரோனா காலத்தில் சிறப்பான சேவையை ஆற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நிரந்தர ஆசிரியர் சேவையில் உள்ளீர்த்துக் கொள்ளுமாறு இதன்போது கோரிக்கை விடுத்தார்.
இந்த விடயத்தில் மத்தியஸ்த தீர்ப்பொன்றும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமை இருந்தபோதிலும், அவர்களை ஏன் ஆசிரியர் சேவையில் உள்ளீர்த்துக் கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு கேள்வி எழுப்பினார்.
அதே நேரத்தில் 52,000 பட்டதாரி வெற்றிடங்கள் காணப்படுவதாக பிரதமர் கூட இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். 35,000 வேலையில்லாப் பட்டதாரிகள் காணப்படுகின்றனர். இவர்களை அரச தொழில்வாய்ப்பில் இணைத்துக் கொள்ளுங்கள்.
கம்பஹா விக்கிரமாராச்சி சுதேச மருத்துவக் கல்லூரியின் பாடத்திட்டம் சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறே, இங்கு விரிவுரை மண்டபங்கள் மற்றும் ஆய்வகங்களில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இது குறித்தும் கவனம் செலுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

