
06 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது
மன்னார் பள்ளியமுனை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து நேற்றுமுன்தினம் (10) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 6 கிலோ கிராம் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய முயற்சியின் கீழ் முன்னெடுக்கப்படும் “போதையற்ற நாடு – ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால தலைமுறையை போதைப்பொருள் அபாயத்திலிருந்து பாதுகாக்க கடற்படை தீவின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகிறது.
இதன்காரணமாக, வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் கஜபா, மன்னார் பிரிவு காவல்துறை குற்றப்பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட இந்தச் சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்குத் தயார் நிலையில் இருந்த வெளிநாட்டு கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு 10 இலட்சம் ரூபாயை கடந்திருக்குமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

