புத்தாண்டு கொண்டாட்டம் ; கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம் ; கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

2026 புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நாளை (31) வெளி மாகாணங்களில் இருந்து பெருமளவிலான மக்கள் கொழும்பு நகருக்கு, குறிப்பாக காலி முகத்திடல் பகுதிக்கு வருகை தருவார்கள் என பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.

இதனை முன்னிட்டு, ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், நாளை இந்தப் பகுதிகளில் வழமைபோன்ற போக்குவரத்து நடைமுறையில் இருக்கும் என்றும், கடும் நெரிசல் ஏற்பட்டால் மாத்திரமே தேவைக்கேற்ப போக்குவரத்து மாற்றங்கள் அமுல்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, காலி வீதி வழியாக கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் என்.எஸ்.ஏ சுற்றுவட்டம், காலி வீதி, பாலதக்ஷ மாவத்தை சந்தியில் இடதுபுறமாக (எம்.ஓ.டி சந்தி) திரும்பி, பாலதக்ஷ மாவத்தை, மாக்கன் மாக்கர் மாவத்தை மற்றும் காலி முகத்திடல் சுற்றுவட்டம் ஊடாக கொள்ளுப்பிட்டி நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படும்.

காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பாலதக்ஷ மாவத்தை சந்தி வரை மற்றும் அதற்கு அப்பாலும் பயணிக்க முடியும்.

எனினும், காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து மாக்கன் மாக்கர் மாவத்தை வழியாக பாலதக்ஷ மாவத்தை ஊடாக காலி வீதி நோக்கி பயணிக்க அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலதக்ஷ மாவத்தையின் கிளை வீதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் வலதுபுறமாகத் திரும்பி கொழும்பிலிருந்து வெளியேற வேண்டும்.

காலி வீதியின் கிளை வீதிகளிலிருந்து நுழையும் வாகனங்கள் வலதுபுறமாகத் திரும்பி என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் நோக்கிச் செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்துத் திட்டத்தின் போது கொழும்பு நகரின் நடைபாதைகளிலும், பிரதான வீதிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்படாது.

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

புத்தாண்டு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கடமைகளுக்காக சுமார் 1,200 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும், கொழும்புக்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்காக விசேட வாகன தரிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 5,900 வாகனங்களை நிறுத்தக்கூடிய இடவசதிகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )