
கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமையானது அரசியலமைப்பு மீறலாகும்
கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமையானது அரசியலமைப்பு மீறலாகும். அரசியலமைப்பின் படி கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமல் அரச நிர்வாகத்தை இந்த அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (06) நடைபெற்ற அமர்வின் போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் , ”அரசியலமைப்பின் 119 ஆவது பிரிவுக்கமைய நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
அரச வருமானம், செலவுகள் தொடர்பான கணக்காய்வுகளை தேசிய கணக்காய்வு திணைக்களம் மேற்கொள்கிறது. தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவின் தலைவராக கணக்காய்வாளர் நாயகம் பதவி வகிக்க வேண்டும். எனினும் ஆணைக்குழுவில் ஏனைய உறுப்பினர்கள் உள்ளார்கள். தலைவர் இல்லை.
கணக்காய்வாளர் நாயகம் பதவி கடந்த மாதம் 06ஆம் திகதியுடன் வறிதாக்கப்பட்டது. ஜனாதிபதியால் முன்மொழியப்படும் பரிந்துரைகளை அரசியலமைப்புப் பேரவை நிராகரிக்கிறது.
அரசியலமைப்பின் பிரகாரம் தகுதியான ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரையில் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம் வழங்கப்படவில்லை. இது அரசியலமைப்பு மீறலாகும். இதனால் இன்று அரச நிர்வாகத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

