
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க முன்னுரிமை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அடுத்த பாராளுமன்ற அமர்வுக்கான விவாதங்களை தீர்மானிக்கும் பாராளுமன்ற விவகாரக் குழுக் கூட்டம் ஏன் இவ்வாரத்தில் நடைபெறவில்லை என எதிர்க்கட்சியின் முதற்கோலாளர் கயந்த கருணாதிலக்க கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிமல் ரத்நாயக்க, இரண்டு முக்கிய சட்டவாக்கங்கள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளை அரசு எதிர்பார்த்து காத்திருப்பதாகக் கூறினார். மேலும், எதிர்க்கட்சியினர் தயாரித்து வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நிலையியற் கட்டளைகளின்படி முன்னுரிமை அளிக்க வேண்டியிருப்பதால், அதனையும் கருத்தில் கொண்டு பாராளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தை நடத்த அரசு காத்திருப்பதாக அவர் விளக்கினார்.
பாராளுமன்ற அமர்வு நடைபெறும் நாட்களிலேயே விவகாரக் குழுக் கூட்டத்தை நடத்துவது வழமையான நடைமுறை என சுட்டிக்காட்டிய கயந்த கருணாதிலக்க, விவாதங்களுக்கு தயாராக பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பிமல் ரத்நாயக்க, அடுத்த அமர்வு வாரத்திற்கான விவாதங்களுக்கு உறுப்பினர்கள் தயாராகிக் கொள்ளும் வகையில், விவகாரக் குழுக் கூட்டம் விரைவில் திட்டமிடப்படும் என உறுதியளித்தார்.

