
கிழக்கு மாகாணம் முழுவதும் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கி புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக GMOA தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள 2 பொது வைத்தியசாலைகள், ஒரு போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 113 ஆரம்ப சுகாதார மத்திய நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் சேர்ந்த வைத்தியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான வைத்தியர் ஜனித் பேதுருஆரச்சி தெரிவித்துள்ளார்.

