அமெரிக்கா தலையிட்டால் மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும் ; ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை

அமெரிக்கா தலையிட்டால் மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும் ; ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கி வருவதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

இதற்கு எதிர்வினையாக, அமெரிக்கா ஈரானில் ராணுவ ரீதியாகத் தலையிட முயன்றால் அதற்கு கடும் விளைவுகள் ஏற்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஈரான் பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய சபாநாயகர் முகமது பாகர் காலிபப், “ஈரானின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான தவறான முடிவுகளை எடுப்பதையோ, ராணுவ ஆக்கிரமிப்பை பற்றிச் சிந்திப்பதையோ அமெரிக்க அதிகாரிகள் கைவிட வேண்டும்” எனக் கடுமையாகக் கூறினார்.

மேலும், “ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்த டிரம்ப் நிர்வாகம் துணிந்தால், அவர்கள் இதுவரை எதிர்கொள்ளாத அளவுக்கு மிகப்பெரிய பதிலடியை சந்திக்க நேரிடும். அது அவர்களுக்கு மறக்க முடியாத ஒரு வரலாற்றுப் பாடமாக அமையும்” என அவர் எச்சரித்தார்.

ஈரானின் உள்நாட்டு அரசியல் குழப்பங்களை அமெரிக்கா தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டிய காலிபப், ஈரானிய மக்கள் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் வல்லமை கொண்டவர்கள் என தெரிவித்தார்.

மேலும், மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ நடமாட்டத்தை ஈரான் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு சிறிய அச்சுறுத்தலுக்கும் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை முழுமையாக தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்கா அத்துமீறினால், ஈரான் அருகிலுள்ள நாடுகளில் நிலை கொண்டுள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )