
T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணி உத்தியோகபூர்வமாக நீக்கபட்ட நிலையில் பாகிஸ்தான் பங்கேற்பு குறித்து எழுந்துள்ள நிச்சயமற்ற தன்மை
பங்களாதேஷ் அணியை 2026 T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து ஐ.சி.சி உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ள நிலையில், தற்போது பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்தும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது .
இந்தியாவுக்குச் செல்ல மறுத்த பங்களாதேஷ் அணி 2026 டி20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்ட நிலையில்
பாக்கிஸ்தான் அணியின் நிலைப்பாடு குறித்து , பாகிஸ்தான் அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
ஐ.சி.சி இந்தியாவுக்குச் சாதகமாக இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாகவும், பங்களாதேஷிற்கு இழைக்கப்பட்டது அநீதியாகும் எனவும் பங்களாதேஷ் நீக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கருத்துத் தெரிவித்த நக்வி,குற்றம் சுமத்தியுள்ளார்.
பாகிஸ்தான் அரசாங்கம் தமக்கு வழங்கும் அறிவுறுத்தலுக்கு அமையவே ,உலகக்கிண்ணப் பங்கேற்பு தொடர்பான தமது நிலைப்பாடு இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தற்போது நாட்டில் இல்லை எனவும் அவர் திரும்பியதும் இறுதி முடிவை அறிவிப்பேன் எனக் கூறிய நக்வி ”நாங்கள் அரசாங்கத்திற்கே கட்டுப்படுவோம் ,ஐ.சி.சி-க்கு அல்ல என அவர் கூறினார்.
போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுமாறு ,கடந்த ஒரு வாரமாக கோரிக்கை விடுத்து வந்த பங்களாதேஷிற்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்கி வருவதுடன் கடந்த வாரம் நடைபெற்ற ஐ.சி.சி கூட்டத்தில், பங்களாதேஷின் நிலைப்பாட்டிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மட்டுமே ஆதரவு வழங்கியது.
இம்முறை T-20 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கூட்டாக நடத்தப்படுகின்ற போதிலும், பங்களாதேஷின் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே திட்டமிடப்பட்டிருமை குறிப்பிடத்தக்கது.

