அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (26) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவிப்பதன்படி, ஐந்து தொழிற்சங்க வழிமுறைகளின் கீழ் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய, கிளினிக்குகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் (OPD) இல்லாத மருந்துகளை வெளி மருந்தகங்களில் கொள்வனவு செய்ய வழங்கப்படும் பரிந்துரைச் சீட்டுகளை வழங்காமை, வைத்தியசாலை அமைப்பில் இல்லாத ஆய்வுகூட பரிசோதனைகளை வெளி ஆய்வுகூடங்கள் அல்லது தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ள பரிந்துரைகள் வழங்காமை, அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை வழங்கப்படாத நிலையில் வைத்தியசாலை அமைப்பிற்குள் புதிய பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்காமை, அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படும் சில கிளினிக்குகள் மற்றும் சுகாதார முகாம்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமை, மேலும், நோயாளிகளை பரிசோதிக்கும் போது வைத்தியருக்கு உதவியாக உதவி உத்தியோகத்தர் வழங்கப்படாவிடின், அந்த இடங்களில் இருந்து வைத்தியர்கள் கடமையிலிருந்து விலகுதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் சமில் விஜேசிங்க,

“இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் வேலை செய்யாமல் இருப்பதற்காக அல்ல. நாளை முதல் நாங்கள் பணியில் ஈடுபடுவோம். ஆனால், வேலை செய்யக்கூடிய சூழலில் மட்டுமே. தேவையான வசதிகள் வழங்கப்படாவிடின், இலவச சுகாதார சேவை சீர்குலைவதற்கான பொறுப்பு சுகாதார அமைச்சுக்கும் அரசாங்கத்திற்குமே உரியது” எனக் குறிப்பிட்டார்.

மேலும், ஜனவரி 28ஆம் திகதி புதன்கிழமை மத்திய செயற்குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அக்கூட்டத்தில் இதற்கு அப்பாலான தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை நாளுக்கு நாள் தீவிரமடையும் எனவும், இதன் காரணமாக சுகாதார கட்டமைப்பு அல்லது நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படும் பட்சத்தில், அதற்கான முழுப் பொறுப்பையும் சுகாதார அமைச்சும் அரசாங்கமும் ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )