முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, வழக்குடன் தொடர்புடைய மேலதிக சாட்சிகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2016ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் திகதி முதல் 2020ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாகவும், கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கியதன் மூலம் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )