
நிரந்தர நியமனம் கோரி உண்ணாவிரதம் ; பாடசாலை மேம்பாட்டு அலுவலர்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சுவார்த்தை
நிரந்தர நியமனம் மற்றும் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளும் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாடசாலை மேம்பாட்டு அலுவலர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே இன்று (03) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
ஆசிரியர் சேவையில் தங்களை இணைத்துக் கொள்ளக் கோரி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் பாடசாலை மேம்பாட்டு அலுவலர்களுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 9வது நாளாகத் தொடர்வதுடன், நேற்றும் பாடசாலை மேம்பாட்டு அலுவலர்கள் அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பாடசாலைகளில் பணியாற்றி வரும் பாடசாலை மேம்பாட்டு அலுவலர்களை கற்பித்தல் சேவையில் இணைத்துக் கொள்ளக் கோரி, கடந்த 26ஆம் திகதி அபிவிருத்தி அலுவலர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

