அமெரிக்கா – கனடாவை இணைக்கும் “Gordie Howe” பாலம் : 50% உரிமை கோரும் ட்ரம்ப்

அமெரிக்கா – கனடாவை இணைக்கும் “Gordie Howe” பாலம் : 50% உரிமை கோரும் ட்ரம்ப்

கனடா அரசின் நிதியில் 4.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள “ Gordie Howe ” சர்வதேச பாலம், அமெரிக்காவின் மிச்சிகன் மாநில டெட்ராய்ட் நகரத்தையும், கனடாவின் ஒன்டாரியோ மாநில விந்த்சர் நகரத்தையும் இணைக்கிறது.

இந்த பாலத்தின் உரிமையில் குறைந்தது 50 சதவீத பங்கு அமெரிக்காவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கு முன் இந்த பாலத்தை திறக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்டரும்ப் தனது சமூக ஊடக பதிவில் மேலும் தெரிவிக்கையில்,

“அமெரிக்கா கனடாவுக்கு வழங்கிய அனைத்து உதவிகளும் முழுமையான ஈடு செய்யப்பட வேண்டும். அதற்கு மேலாக, கனடா அமெரிக்காவை நியாயத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும். அதுவரை இந்த பாலம் திறக்கப்படாது, நாம் உடனடியாக பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம். இந்த சொத்திலாவது குறைந்தது பாதி உரிமை அமெரிக்காவுக்கே இருக்க வேண்டும்,” என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

“Gordie Howe ” சர்வதேச பால திட்டம் முன்னாள் மிச்சிகன் ஆளுநர் ரிக் ஸ்னைடர் காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, முழுமையாக கனடா அரசால் நிதியளிக்கப்பட்டதாகும்.

இந்த புதிய பாலம் தற்போது பயன்பாட்டில் உள்ள அம்பாசடர் பாலத்தில் நிலவும் கனரக வாகன போக்குவரத்தை குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.

வின்ட்சர் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் படி, இந்த பாலம் செயல்பாட்டுக்கு வந்தால் எல்லை கடக்கும் நேரம் 20 நிமிடங்கள் வரை குறையக்கூடும் என்றும், அடுத்த 30 ஆண்டுகளில் லாரி ஓட்டுநர்களுக்கு சுமார் 2.3 பில்லியன் டொலர் சேமிப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் கனடாவுக்கு எதிராக பல்வேறு கடுமையான வர்த்தக மிரட்டல்களை விடுத்து வருகிறார்.

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்தால் 100 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என்றும், கனடாவில் தயாரிக்கப்படும் விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கிடையிலான USMCA வர்த்தக உடன்படிக்கை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரவுள்ள நிலையில், இந்த புதிய மோதல்கள் இரு நாடுகளுக்கிடையே மேலும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.

அமெரிக்கா–கனடா உறவுகளில் உருவாகி வரும் இந்த புதிய பதற்றம், வட அமெரிக்க வர்த்தக எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )