
காசாவின் குடியிருப்பு பகுதிகளுக்குள் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
காசா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதில், பல பலஸ்தீனர்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த கட்டிடம், ஏற்கனவே போரின் போது நடந்த முந்தைய தாக்குதல்களில் சேதமடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சமீபத்திய தாக்குதலில் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அல்-நுஸ்ரா (Al-Nusra) பகுதி, மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி என்பதால், பலர் பாதுகாப்பிற்காக இங்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆனால், அதே பகுதியில் இத்தாக்குதல் நிகழ்ந்தது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசா அரசின் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமாதான ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து இதுவரை குறைந்தது 1,500 முறை இஸ்ரேலிய இராணுவம் அந்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
இதனால் காசா மக்களிடையே மீண்டும் பதற்றம் நிலவுவதாகவும், இனி என்ன நடக்கப்போகிறது என்ற அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

